புதுடில்லி:“மோட்டார் பைக்கில் வந்து ஐந்து லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற கொள்ளையர் விரைவில் கைது செய்யப்படுவர்,” என, புதுடில்லி மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கீர்த்தி நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை அலுவலர் ஹன்னி குமர் கல்ரா,42, கடந்த 14ம் தேதி மாலை, வசூல் முடிந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் தன் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
ரூப் நகரின் பரபரப்பான பிரதான சாலையில் ஹெல்மெட் அணிந்து இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் கல்ராவை தாக்கி, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், கல்ராவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பகுதில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர் பற்றிய சில விவரங்கள் கிடைத்து உள்ளன.
அவர்களை கைது செய்ய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையரை விரைவில் கைது செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.