திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாயிலாக சென்று வருகின்றனர். ஆனால் மூலவரை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் விரைந்து மூலவரை தரிசிக்க தனி வழியும், படிகள் இல்லாமல் சாய்தளம் வாயிலாக செல்வதற்கு தேர் வீதியில் இருந்து, கோவில் உள்பிரகாரம் செல்வதற்கு வசதியாக, 30 அடி நீளம், 4 அடி அகலத்தில் மரப்பலகையால் சாய்தளம் அமைத்துள்ளனர்.
இதனால் மாற்றுத்திறனாளிகள் எளிதாக மூலவரை தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாய்தளம் பாதை தயாராகி ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
எனவே, கோவில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை விரைவாக திறக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாய்தளம் பாதையில் சிறு, சிறு வேலைகள் மீதம் உள்ளதால், திறப்பு விழா காலதாமதம் ஆகிறது. இன்னும் ஓரிரு நாளில் சாய்தளம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும்,'' என்றார்.