ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி போதிய பாதுகாப்பு வசதிகளுடன் நடத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே மீடியன் அமைக்க கட்டுமான கம்பிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் இந்த நெடுஞ்சாலையின், நடுவே நின்று கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.
இதனால், இவர்கள் மீது வாகனங்கள் மோதும் ஆபத்து உள்ளது.
மேலும், நெடுஞ்சாலை நடுவே கட்டுமானம் நடைபெறுகிறது என வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகை, தடுப்புகள், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் என ஏதும் அமைக்கவில்லை.
இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் விபதுக்குள்ளாகும் நிலை உள்ளது.
விபத்தை தடுக்க விரிவாக்கப் பணி நடக்கும் இடங்களில் போதிய அளவில் தடுப்புகள், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை நெடுஞ்சாலைத் துறையினர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.