காஞ்சிபுரம்:அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டிகளில், ஏப்.,15ம் தேதிக்குள் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் மற்றும் காய்கறி பயிர்களை பயிரிடுகின்றனர்.
இதில், ஏரி நீர் பாசனம் மற்றும் கிணற்று நீர் பாசனம் பெரும்பாலான விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு, 40 நெல் மூட்டை வரையில் நெல் அறுவடை செய்கின்றனர்.
ஒரு சில முன்னோடி விவசாயிகள், 45 நெல் மூட்டைகள் வரையில் கூடுதல் மகசூல் எடுக்கின்றனர்.
இதுபோன்று நெல் சாகுபடி செய்து, கூடுதல் மகசூல் ஈட்டும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, நாராயணசாமி நெல் உற்பத்தி திறனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டிகளில், அனைத்து தரப்பு நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளும் பங்கேற்கலாம்.
பாதுகாவலர் விருது
குறிப்பாக, வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து, மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு, 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அதேபோல், பாரம்பரிய ரக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, முதல் இடம் பிடிப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய். இரண்டாம் பரிசு பெறுவோருக்கு, 75 ஆயிரம் ரூபாய்.
மூன்றாவது பரிசு பெறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, உளுந்து மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநிலஅளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கேற்கலாம்.
இதில், 50 சென்ட் நிலத்தில், வேர்கடலை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசாக, 15ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல், 50 சென்ட் நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல் பரிசு மற்றும் 10 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரொக்கப்பரிசு
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மாவட்ட வேளாண் துறைநிர்வாகம் அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பா.இளங்கோவன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பயிர் விளைச்சல் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், பங்கேற்க விரும்புவோர் ஏப்.,15ம் தேதி வரையில், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று, நுழைவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
பயிர் விளைச்சல் போட்டிகளில், அதிக மகசூல் எடுத்தவர்களுக்கு அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
முன்னதாக, நெல் அறுவடை செய்வதற்கு முன், முறையாக வேளாண் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த பிறகே நெல் அறுவடை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.