கும்மிடிப்பூண்டி,:இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில், சத்யராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏற்பாட்டின் போது, 40 அடி உயரத்தில் இருந்து லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த, அய்யர்கண்டிகை கிராமத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான, 'ஏ.ஆர்.ஆர்., பிலிம் சிட்டி' என்ற பெயரில் ஸ்டூடியோ இயங்கி வருகிறது.
அதில், நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்தின் படப்பிடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சென்னை, சாலிகிராமம் பகுதியில் வசித்த குமார், 47, என்பவர், அந்த படப்படிப்பு குழுவில் லைட்மேனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை, அந்த திரைப்பட 'செட்'டில், 40 அடி உயரத்தில் ஏறிய குமார், மின் விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும்போது, வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து, கவரைப் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த குமார், 17 ஆண்டுகளாக, படப்பிடிப்பு குழுவில் லைட்மேனாக வேலை பார்த்துள்ளார். அவருக்கு, ஜூலியட் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.