சென்னை:சென்னையில் இந்த ஆண்டு குடியரசு தின விழா, உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. முதல் ஒத்திகை அணிவகுப்பு, நாளை நடக்க உள்ளது.
அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே கொண்டாடப்படும். தற்போது அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், விழாவை வேறு பகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பல கட்ட ஆலோசனைக்கு பின், மெரினா கடற்கரையில், காமராஜர் சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை காலை, குடியரசு தின விழா முதல் ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அடுத்து 22, 24ம் தேதிகளில் ஒத்திகை நடக்கும்.
வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி, கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடக்கும்.