சென்னை:'பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கு களை, குறித்த காலத்துக்குள் குடும்ப நல நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த தம்பதி, தங்கள் மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி, 2014ல், மாவட்ட 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தாய்,- தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக, மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு, 2019ல் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன.
ஆனால், 2014 முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை, குறிப்பிட்ட காலத்துக்குள், குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
இடைக்கால உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள், குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்.
வழக்கின் தீவிரத்தைப் புரிந்து, குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படவில்லை எனில், அதை இந்த நீதிமன்றம் தீவிரமாக கவனத்தில் கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.