சென்னை:தமிழகம் சர்ச்சையை தொடர்ந்து, தி.மு.க., தன் சாதனை விளம்பரத்தில், 'தமிழகம்' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளது.
தி.மு.க., சார்பில், அரசின் சாதனைகளை விளக்க, 'தலை நிமிர்ந்த தமிழகம்; மனங்குளிருது தினந்தினம்' என்ற தலைப்பில், 'மகளிர் உயர, மாநிலம் உயரும்' என, அரசு பஸ்சில், மகளிருக்கு இலவச பயணம் அனுமதி குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.
இது தொடர்பான போஸ்டர்கள், தி.மு.க., சார்பில் தமிழகம் எங்கும் ஒட்டப்பட்டன; வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவற்றை தி.மு.க., பிரமுர்கள், தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினமான, ஜன., 1ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும், 'தலை நிமிர்ந்த தமிழகம், மனங்குளிருது தினந்தினம்' என்ற வாசகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இம்மாதம் 4ம் தேதி, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, 'தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும்' எனப் பேசியது, பெரும் சர்ச்சையானது.
அவருக்கு எதிராக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொந்தளித்தன. திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி வந்த தி.மு.க., 'தமிழ்நாடு வாழ்க' எனக் குரல் எழுப்ப துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க., தன் விளம்பரத்திலும், 'தமிழகம்' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை பயன்படுத்த துவங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தி.மு.க., வெளியிட்ட விளம்பரத்தில், 'தலை நிமிர்ந்த தமிழ்நாடு; தனித்துவமான பொன்னாடு' என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது.
'ஆட்சியில் அறம்; அனைவரும் நலம்' என்ற வாசகங்களுடன், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது. நீர்ப்பாசன சாகுபடியை அதிகரித்தது, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது.
பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கியது போன்றவற்றை விளம்பரப்படுத்தி உள்ளனர். அத்துடன், 'வெல்லும் திராவிட மாடல்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
கவர்னரின் பேச்சால், தி.மு.க., தன் விளம்பரத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. அத்துடன், திராவிட நாடு எனக் கூறி வந்த நிலை மாறி, 'தமிழ்நாடு' என்று பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.