சென்னை:'நீட்' தேர்வு வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது.
இது தவிர, நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில், 2020ல் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், 'நீட்' தேர்வு வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன், எம்.பி., - என்.ஆர்.இளங்கோ, தலைமை செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டத்துறை செயலர் கோபி ரவிகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, எடுத்து வைக்க வேண்டிய விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.