'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரை எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என்பதில், அந்த மாநில, பா.ஜ.,வினர் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது...' என்கின்றனர், அங்குள்ள அரசியல் கட்சியினர்.
பீஹாரில், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, திடீரென, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் சேர்ந்து, ஆட்சி அமைத்தவர் தான், நிதிஷ் குமார். கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம், பா.ஜ., ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைப்பதையே வழக்கமாக வைத்துள்ளார், நிதிஷ்.
கூட்டணி மாறினாலும், முதல்வர் பதவியை நிதிஷ் விட்டுக் கொடுப்பது இல்லை; தொடர்ந்து அவர் தான், முதல்வர் பதவியை உடும்புப் பிடியாக வைத்து உள்ளார்.
இதனால், அவர் மீது பீஹார் மாநில பா.ஜ.,வினர் கடும் கோபத்தில் உள்ளனர். பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, பீஹார் மண்ணின் மைந்தன். சமீப காலமாகவே, நிதிஷ்குமாருக்கு எதிராக அனல் கக்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ரூடி, 'பீஹாரில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார், நிதிஷ். இந்த மாநிலத்தைச் சேர்ந்த, 4 கோடி பேர், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்; அவர்களை எப்படி கணக்கெடுக்கப் போகிறார்?
'இந்த மாநிலத்தின் முதல்வராக, 16 ஆண்டுகள் பதவி வகித்துள்ள நிதிஷ், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அவர்கள் ஏன் வேறு மாநிலங்களுக்கு போகப் போகின்றனர். நிதிஷ் குமாரின் முகமூடியை கிழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது...' என, ஆவேசப்பட்டார்.