தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை: நான் மிகவும் மரியாதையாக
பார்க்கக் கூடிய தலைவர், எம்.ஜி.ஆர்., தான். அவர் மீது எனக்கு மிகுந்த
மதிப்பு உண்டு. பெரிய கனவுகளோடு, அ.தி.மு.க.,வை வழிநடத்தி வந்தார் அவர்.
அ.தி.மு.க.,வில் உள்ள அனைவரும், ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் சிறப்பாக
இருக்கும்; இது, என் தனிப்பட்ட கருத்து.
* டவுட் தனபாலு: நீங்க,
இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தாலும், அந்த பணிகளை விட, 'அரசியல்'
பணிகளை நல்லாவே செய்றீங்க... முன்பு ஒரு முறை, தமிழக கவர்னரா இருந்த
வித்யாசாகர் ராவ், பழனிசாமி, பன்னீர்செல்வம் கைகளை கோர்த்து வச்ச மாதிரி,
நீங்களும், அ.தி.மு.க.,வை இணைக்க கிளம்பிட்டீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!
***
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, அ.ம.மு.க., நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்; இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சி சின்னம் இருப்பதால், அ.தி.மு.க., உண்மையாகி விடாது. ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற உண்மையான இயக்கம், அ.ம.மு.க., மட்டுமே. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.,வை மீட்டெடுப்போம்.
* டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வை மீட்போம்'னு அடிக்கடி முழங்குற இவர், தன் கையில இருக்கும், அ.ம.மு.க., வெயில் பட்ட பனிக்கட்டியா கரைஞ்சுட்டே போறதை கண்டுக்காம இருக்காரே... 'நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சு' என்பது, இவரது விஷயத்துல, 'டவுட்'டே இல்லாம விளங்குது!
------
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, தமிழக அமைச்சர் உதயநிதி சந்தித்ததன் மூலம், தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடப் போகிறதா... இது, வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துக்காட்டு. இருவர் சந்திப்பால், தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
* டவுட் தனபாலு: முதல்வரின் குடும்பத்துல கண்டிப்பா மாற்றம் வருமே... மனக்கசப்பால பிரிஞ்சிருந்த மாறன் குடும்பத்தினர், 2008ல முதல்வரா இருந்த கருணாநிதியை மறுபடியும் சந்திச்சப்ப, 'கண்கள் பனித்தது; இதயம் இனித்தது' என்ற, 'டயலாக்'கை எடுத்து விட்டார்... அதை, தனயன் ஸ்டாலின், 'ரிப்பீட்டு' பண்ணுவாருங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!