தாம்பரம்:தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் ஷிலா ஜெபமணி, 51.
கடந்த 16ம் தேதி, இந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமா பிரபா பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை அருகே விபத்து ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து, ஷிலா ஜெபமணிக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
உடனே ஷிலா ஜெபமணி, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றார்.
குரோம்பேட்டை பாலாஜி பவன் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஒன்று, இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த ஷிலா ஜெபமணியை, அங்கிருந்தோர் 108 ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சுயநினைவின்றி இருந்ததால், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, கார் டிரைவரான பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தி, 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.