ஜனவரி 19, 1933
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், சிவசிதம்பரம் -- அவையாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1933ல், இதே நாளில் பிறந்தவர், கோவிந்தராஜன்.
படிக்கும் போதே, கச்சேரிகளை ஆர்வமுடன் கேட்டு, அப்படியே பாடத் துவங்கினார்; அத்துடன், தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எஸ்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்களையும் பாடினார். இசைக் கல்லுாரியில் சேர்ந்து பாட்டு கற்றதுடன், தேவி நாடக சபா, பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.
பொன்வயல் படத்துக்காக, 'சிரிப்பு தான் வருகுதையா...' என்ற பாடல் வாயிலாக, சினிமாவில் அறிமுகமானார். தன் வெண்கலக் குரலால்ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்றார்.
இவரது, 'விநாயகனே... திருச்செந்துாரின் கடலோரத்தில்...' உள்ளிட்ட பாடல்களில் பக்தியும், 'நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்...' என்று தன்னம்பிக்கையும், 'அமுதும் தேனும் எதற்கு...' என்பதில் காதலும், 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்பதில் சோகம் என,நவரச உணர்ச்சிகளையும் கொட்டினார்.
எட்டுக்கட்டையில் ஏழு ஸ்வரம் பாடிய இவர், 1988 மார்ச் 24ல் தன், 55வது வயதில் மறைந்தார். 'சீர்காழி' என்றதும், நினைவிற்கு வரும் இசைப் பேரறிஞர் பிறந்த தினம் இன்று!