திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தற்போது ஆறு அடுக்கு புதிய கட்டடத்தில் இயங்குகிறது.
இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, எந்த மாடியில், என்னென்ன பிரிவு இயங்குகிறது என்பது தெரிவதில்லை.
கடும் சிரமம்
தரைதளத்தில் உள்ள, புறநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் ஊழியர்களிடம் தகவல் கேட்டாலும் முறையாக பதில் கூறுவதில்லை.
சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிக்கும் செவிலியர்களும் அலட்சியம் காட்டுவதால், வயதானோர், நடக்க இயலாத நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, சிகிச்சைக்கு வந்தவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:
அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலும் வசதி குறைந்தவர்கள் தான் வருவர். உள்ளே நுழைந்ததும், வாட்ச்மேன் முதல், ஓ.பி., சீட் பதிவு செய்யும் ஊழியர்கள் வரை, ஒருமையில் பேசி விரட்டுகின்றனர்.
தகவல் கேட்டாலும் சொல்லாமல், அமைதியாவதால், வரிசையில் உள்ளவர்கள் எங்களை விரட்டுகின்றனர்.
மன உளைச்சல்
அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து, 'லிப்ட்'க்கு சென்றால், அங்கும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், படிக்கட்டுகளை பயன்படுத்தி முதல் மாடிக்கு சென்றால், ஒரு சில சிகிச்சைக்கு அதற்கடுத்த மாடிக்கு செல்ல வற்புறுத்துகின்றனர்.
மருத்துவர்களை போல சில செவிலியர்கள் நடந்து கொண்டு, வயதையும் அலட்சியப்படுத்தி ஒருமையில் பேசுகின்றனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மனிதாபிமானம் சிறிதும் இன்றி செயல்படுவதால், நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
தயவுசெய்து, எங்கள் மீது மனிதாபிமானமாவது காட்டுங்கள் என, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வருக்கு நோயாளிகள் வேண்டுகோள் வைத்தனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, 'நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றார்.