திருத்தணி:ஆர்.கே.பேட்டை அருகே நந்தியாறு உருவாகி அய்யனேரி, எஸ்.அக்ரஹாரம், செருக்கனுார், கோரமங்கலம், அகூர், தரணிவராகபுரம் வழியாக திருத்தணி நகருக்குள் நுழைந்து, திருவாலங்காடு ஒன்றியம் இல்லத்துார்- ராமாபுரம் இடையே கொசஸ்தலை ஆற்றில் இணைகிறது. பின், கொசஸ்தலை ஆற்று தண்ணீர், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைகிறது.
மேலும், நந்தியாற்றில் இருந்து, திருத்தணி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது, விவசாயத்துக்கும் நந்தியாறு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், திருத்தணி நகராட்சி, கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் செல்வதற்கு திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளது. இந்த கழிவு நீர் நேரடியாக நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்டபாலம் அருகே கலக்கிறது.
ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, நந்தியாற்றில் கழிவு நீர் கலப்பதை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:
மாநில நெடுஞ்சாலைத் துறையினர் புதிய மற்றும் பழைய சென்னை சாலையோரம் ஏற்படுத்தி கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர் உயர்மட்ட பாலம் அருகே கலைஞர் நகர் சுடுகாடு பகுதியில் தேங்கி நின்றது.
இதனால் இறுதி சடங்கு செய்ய சிரமப்பட்டு வந்தனர். இதனால் சுடுகாட்டில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்றவே புதிதாக கால்வாய் அமைத்துள்ளோம்.
விரைவில் கழிவு நீர் நந்தியாற்றில் கலப்பதை தடுப்பதற்கு, ஆற்றின் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, துாய தண்ணீர் ஆற்றில் செல்லுமாறு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.