திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் தனியாக உருவாகி 25 ஆண்டுகளாகியும், இங்கு செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும், காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி என்றே செயல்படுகிறது. இதை பிரித்து, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியாக செயல்படுத்தினால் கடன் வசதிகளை எளிதில் பெற முடியும் என, 25 ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் இணைந்து செங்கல்பட்டு மாவட்டமாக இயங்கி வந்தது. கடந்த, 1997ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல், திருவள்ளூர் தனி மாவட்டமாக உதயமானது.
இதையடுத்து, மாவட்ட பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டது. இங்கு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மேலும், காவல்துறை, வனம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் மாவட்ட அலுவலகம் இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆனால், கூட்டுறவுத் துறையில் வரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, மின் வாரியம், உள்ளிட்ட துறைகள் மட்டும் இன்றளவும், காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு சங்கத்தின் கீழ், மொத்தம் 49 கிளைகள் உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிளைகள் உள்ளன.
இந்த கிளைகள் அமைந்துள்ள பகுதிகளில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என்ற பெயரில் தான் செயல்படுகிறது.
அதேபோல், மொத்தம் உள்ள 282 வேளாண் தொடக்க கூட்டுறவு வங்கிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 123 வங்கிகள் செயல்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாகியும் இன்றும், காஞ்சிபுரம் மாவட்டம் பெயரிலேயே வங்கி செயல்படுவதற்கு விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
எனவே, தமிழக கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள், திருவள்ளூரை தலைமையிடமாகக் கொண்டு கூட்டுறவு வங்கிகளை பிரித்து, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
அவசியம் என்ன ?
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்குவது வேளாண் வங்கிகள் தான்.
மேலும், இங்கு, உறுப்பினர்களுக்கு தொழில் கடன், நகைக் கடன், திருமண கடன் போன்றவற்றையும் வழங்குகின்றனர். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் கெடுபிடி குறைவு.
இதனால், விவசாயிகள் அல்லாது பொதுமக்களும் உறுப்பினர்களாக சேர்ந்து கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.
உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் தொகை அனைத்தும், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்திற்கு தான் செல்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசூலாகும் பணம் அனைத்தும், காஞ்சிபுரத்திற்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் செலுத்தும் பணத்தை முழுதும், தாங்களே பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
நிதி குறைபாட்டினை காரணம் காட்டி, கடன் வழங்கும் எண்ணிக்கையை வங்கி அலுவலர்கள், குறைத்துக் கொள்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு வங்கிகள் செயல்பட்டால், இம்மாவட்டத்தில் வசூலாகும் நிதியை கொண்டு, இம்மாவட்ட விவசாயிகளே முழுதும் பயனடைவர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து, தனியாக கூட்டுறவு வங்கி செயல்பட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
'அரசு அனுமதி வழங்கியதும், திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக பிரிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும்' என்றார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் செயல்படும் வங்கி, சங்கங்கள் ஒரு ஒப்பீடு:
சங்கங்களின் வகை காஞ்சிபுரம் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் மொத்தம்
வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் 159 123 282
ஊரக வங்கி 1 1 2
பணியாளர் கூட்டுறவு சங்கம் 55 82 137
கூட்டுறவு கடைகள் 14 14 28
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி 7 11 18
நகர கூட்டுறவு வங்கி 5 1 6
கூட்டுறவு சந்தை சங்கம் 3 3 6
நெசவாளர் கூட்டுறவு சங்கம் 92 79 171
வீடு கட்டும் சங்கம் 13 1 14
பால் சங்கம் 99 28 127
இதர சங்கங்கள் 37 16 52
மொத்தம் 485 359 844