பூமியின் வட கோளத்தில் அதிகரிக்கும் குளிர் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, வலசை பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
அந்த வகையில், மங்கோலியா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் வரித்தலை வாத்துகள், தமிழகத்துக்கு வருகின்றன.
நெல்லை மாவட்ட கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுக்கு, 5,000 வரித்தலை வாத்துகள் வருவது வழக்கம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில நீர் நிலைகளில் அரிதாக வரித்தலை வாத்துகள் வந்து செல்லும்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கழிமுக பகுதியில் டிச., 16ல், இவ்வாத்துகள் காணப்பட்டன. தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்துள்ளன.
இது குறித்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
மங்கோலியாவில் இன பெருக்கத்துக்காக நீண்ட காலம் தங்கும் வலசை பறவையான வரித்தலை வாத்துகள், இந்தியாவுக்கு அரிதாக வரும். இதில், சென்னையை ஒட்டிய நீர் நிலைகளுக்கு வருவது மிகவும் அரிதான நிகழ்வு.
இந்நிலையில், முட்டுக்காடு கழிமுகத்தில் சமீபத்தில் ஏழு பறவைகள் வந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு முதல் முறையாக வரித்தலை வாத்துகள் வந்துள்ளன.
வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், இதன் வருகை உறுதி செய்யப்பட்டது.
இத்துடன் சேர்த்து பள்ளிக்கரணையில், 192 வகை பறவைகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. வரித்தலை வாத்துகளுக்கு ஏற்ற சூழல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருப்பது இதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.
இதை பாதுகாக்கும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'வெள்ளை வாலாட்டிகள்'
கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள, பறவைகள் வருகை குறித்த விபரங்களை வனத்துறையுடன் இணைந்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து இந்த அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வழக்கமாக, மஞ்சள் வாலாட்டி, எலுமிச்சை வாலாட்டி, காட்டு வாலாட்டி, வெள்ளை வாலாட்டி ஆகிய வகையைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. இதில், 2010 முதல் ஆண்டு தோறும் வெள்ளை வாலாட்டி பறவைகள் இங்கு வருகிறது.
இதுவரை ஒரு பறவை என்ற அளவில் மட்டும் தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக ஒரே இடத்தில் இரண்டு வெள்ளை வாலாட்டி பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்த விபரங்கள் புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டள்ளது. சிறு பூச்சிகளை உணவாக எடுத்துக்கொள்ளும் வெள்ளை வாலாட்டிகள், ஐரோப்பாவில் இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதன் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -