ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர அரசுகள் இடையே தெலுங்கு கங்கை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும்.
கண்டலேறு அணையில் இருந்து, 152 கி.மீ., சாய்கங்கை கால்வாய் வழியே ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டை அடையும், கிருஷ்ணா நீர் அங்கிருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.
துவக்கத்தில் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,100 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தற்போது, 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்துள்ளது.
நேற்று, காலை 6:00 நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில், 248 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை, 3.376 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.