மொழியின் கடந்த கால நிலையையும் எதிர்கால நிலையையும் உற்று நோக்க, அகராதிகள் முக்கியமானவை. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், அகராதிகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரசுத் துறை. அதில், தொகுப்பாளராக பணியாற்றுபவர் கார்த்திக். அவரிடம் பேசியதில் இருந்து:
தமிழில் அகராதி தோன்றிய காலம் எது?
தமிழில் முதல் இலக்கண நுாலான தொல்காப்பியத்திலிருந்தே, சொற்களுக்கான பொருள் விளக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திவாகரம், பிங்கலம், சூடாமணி, சிந்தாமணி என நிகண்டுகள் உருவாயின. அவை, செய்யுள் வடிவில் அருஞ்சொற்பொருளை விளக்கின.
அதைத் தொடர்ந்து, நம் நாட்டுக்கு வந்த பிரிட்டிஷார், வியாபாரம் உள்ளிட்ட பணிகளைச் செய்ய, அகர வரிசைப்படி, தமிழ் சொற்களுக்கு பொருளை தொகுத்தனர். அவ்வாறு முதலில் அகராதியை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
அதனால் தான், அவரை அகராதியியலின் தந்தை என்கிறோம்.
தமிழில் எத்தனை அகராதிகள் உள்ளன?
நிறைய உள்ளன. சென்னை பல்கலையில், தமிழ் லெக்சிகன் எனும் பெரிய தொகுப்பு வெளியிடப்பட்டது. பின், 1974ல், தமிழக அரசு அகரமுதலி திட்ட இயக்ககத்தை தொடங்கியது. இங்கு, ஒரு சொல்லுக்கான வேர்ச்சொல்லை ஆராய்ந்து, ஒரு சொல்லுக்கான பொருள் மட்டுமல்லாது, அதன் வரலாற்றையும் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
அதன்படி, 2011 வரை தொகுக்கப்பட்ட சொற்பொருள் அகராதிகளை, 30 மடலங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டது.
பொதுவாகவே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகராதிகளை புதுப்பிப்பது நல்லது. அதன்படி, திருத்திய மற்றும் சுருக்கிய பதிப்புகள் வெளியிடப்பட்டன.
அகரமுதலி திட்ட இயக்கத்தின் வழியாக எந்த மாதிரியான அகராதிகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன?
வினைச்சொல் அகராதி, பெயர்ச்சொல் அகராதி, துாய தமிழ் அகராதி, நடைமுறைத் தமிழகராதி, மரபுத் தொடர் அகராதி, இருபொருட்பன்மொழி அகராதி, வட்டார வழக்கு சொல் அகராதி, ஊடகத்தமிழ் அகராதி என, பல தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இவை எந்த வகையில் மொழி வளர்ச்சிக்கு உதவும்?
பொதுவாக வினைச்சொல் தான், பெயர்ச்சொல்லுக்கு அடிப்படை. அது, பெரும்பாலும் மொழிக்கலப்பால் அழியாது. அதன் அடிப்படையை தொகுப்பது அவசியம் என்பதால், வினைச் சொல் அகராதி பயன்படும்.
வட்டார வழக்கு சொற்கள் வளத்தையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. அவற்றைத் தொகுப்பதால், பிற வட்டார மக்களுக்கு புதிய சொல் அறிமுகமாகும்.
இலக்கியத் தமிழ் அகராதி என்பது, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சங்க காலம் முதல் பாரதி காலம் வரயைிலான செய்யுள்களுக்கான பொருள் தேட உதவும். இப்படி அனைத்து அகராதிகளும் மொழி வளர்க்க அவசியம் தான்.
இவற்றைப் பரவலாக்க என்ன வழி?
பொதுவாக, அனைவரும் அகராதியைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு, தமிழ் மொழி மீது ஏற்படும் சந்தேகத்தைப் போக்கும் வகையில், இணைய வழியில் இந்த அகராதிககளை பதிவேற்றிஉள்ளோம்.
இதில், மதன் கார்க்கியின் சொல்லகராதி, சென்னைப் பல்கலை அகராதி, இணையத் தமிழ் கல்விக் கழகத்தின் அகராதி உள்ளிட்டவை பதிவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சொற்குவை திட்டமும் செயல்படுகிறது. சொற்குவை இணையதளத்தில் 7.90 லட்சம் சொற்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -