சென்னை, 'பியூச்சர் டேலன்ட்ஸ் டி - 20' கிரிக்கெட் போட்டியில், பிரசிடென்சி கல்லுாரி அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் எம்.சி.சி., கல்லுாரி அணியை தோற்கடித்தது.
டி.என்.சி.ஏ., எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பியூச்சர் டேலன்ட்ஸ் டி - 20' கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில் மொத்தம், 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் நடந்த நாக் - அவுட் போட்டி ஒன்றில், பிரசிடென்சி கல்லுாரி மற்றும் எம்.சி.சி., கல்லுாரி அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய பிரசிடென்சி கல்லுாரி அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, எட்டு விக்கெட் இழப்புக்கு, 124 ரன்களை குவித்தது.
அணியின் வீரர் சுபாஷ், 33 பந்துகளில் ஐந்து சிக்சர், இரண்டு பவுண்டரி என, 45 ரன்களும், லோகேஷ் 11 பந்துகளில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என, 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து, 125 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய எம்.சி.சி., அணி, பிரசிடென்சி அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 14.2 ஓவர்களிலேயே 'ஆல் அவுட்' ஆகி, 74 ரன்களில் சுருண்டது.
பிரசிடென்சி அணி வீரர் அசோக் குமார், நான்கு ஓவர்கள் பந்து வீசி, 3 விக்கெட் எடுத்து, 21 ரன்களையும், இளையரசு மூன்று ஓவர்கள் பந்து வீசி, இரண்டு விக்கெட் எடுத்து, 10 ரன்களையும் கொடுத்தார்.
நேற்று காலை நடந்த போட்டியில், எஸ்.எஸ்.என்., கல்லுாரி மற்றும் நியூ கல்லுாரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த எஸ்.எஸ்.என்., அணி, 20 ஓவர்களில், இரண்டு விக்கெட்டை இழந்து, 234 ரன்களை அடித்து அசத்தியது.
அணியின் வீரர் மிதுல் ராஜ், 56 பந்துகளில், இரண்டு சிக்சர், 17 பவுண்டரி உட்பட 106 ரன்கள் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் ராகுல் அய்யப்பன், 28 பந்துகளில், ஒரு சிக்சர், ஒன்பது பவுண்டரி என, 79 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து பேட் செய்த நியூ கல்லுாரி அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழந்து போராடி, 134 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. இதில், 100 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.எஸ்.என்., கல்லுாரி அணி வெற்றி பெற்றது.