சென்னை, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் கருவிகளை, மெட்ரோ நிர்வாகம் விரைவில் நீக்க உள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் தற்போது, 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன; தினமும், 2.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
காகித டிக்கெட், பயண அட்டை, 'க்யூ.ஆர்., கோடு' தொழில்நுட்ப வசதியாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது. பயணியர் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் துவக்கத்தில் டிக்கெட் வழங்கும் தானியங்கி கருவிகள் நிறுவப்பட்டன.
ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இரண்டு முதல் நான்கு கருவிகள் நிறுவப்பட்டன. அதன்படி, மொத்தம் 41 ரயில் நிலையங்களில், 140க்கும் மேற்பட்ட கருவிகள் இருந்தன. இருப்பினும், இந்த இயந்திரங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், டிக்கெட் எடுக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் இந்த கருவிகள் காட்சிப்பொருளாகவே இருக்கின்றன. எனவே, இந்த கருவிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் நீக்க உள்ளது.
இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயணியர் அட்டை, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் க்யூ.ஆர்., தொழில்நுட்பம் வாயிலாக டிக்கெட் வசதி தற்போது இருக்கிறது.
இது தவிர, 'டிக்கெட் கவுன்டர்'கள் வாயிலாகவும் உடனுக்குடன் டிக்கெட் வழங்கப்படுகிறது. தானியங்கி டிக்கெட் கருவிகளில் அடிக்கடி தொழில்நுட்ப வசதி கோளாறு ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த டிக்கெட் இயந்திரங்களை படிப்படியாக நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால், புது வசதியுடன் கூடிய சிறிய தானியங்கி கருவிகளை கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.