- நமது நிருபர் -
சென்னையில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பேருந்து நிறுத்தம், தெரு பெயர் பலகை உள்ளிட்டவற்றில் 'போஸ்டர்' ஒட்டி அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சென்னை மாநகரின் அழகு சீர்குலைந்து, அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதுபோன்று போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னையை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு வருகிறது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து பணிகளையும் இத்திட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனியார் பங்களிப்புடன், மாநகரை அழகாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, செயற்கை நீரூற்று அமைத்தல், மேம்பாலங்களில் செடிகள் வைத்து அழகாக்குதல், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரைதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல் பேருந்து நிறுத்தம், தெரு பெயர் பலகை, மெட்ரோ ரயில் சுவர்கள் உள்ளிட்ட பல சுவர்களில், மாநகரின் அழகை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட 'போஸ்டர்'களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
'ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்கு அடி 'பேனர்' வைக்கும் கலாசாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இனியும் கட்சியினர் யாரேனும், பேனர் கலாசாரத்தை கடைபிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் உத்தரவை பின்பற்றாத தி.மு.க.,வினர், உதயநிதி அமைச்சர் ஆனது முதல், கனிமொழி பிறந்தநாள், தி.மு.க.,வினர் பொதுக்கூட்டங்கள் துவங்கி அனைத்திற்கும், போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.
இந்த போஸ்டர்கள் பேருந்து நிழற்குடையில் வழித்தட எண்களை மறைத்து ஒட்டுப்பட்டுள்ளன. மேலும் தெரு பெயர் பலகையில், பெயரை மறைத்து போஸ்டர் ஒட்டுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையம், அரசு கட்டடங்களின் சுற்றுச்சுவர்களிலும் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்துள்ளது. போஸ்டர்களால் பெரும்பாலான பேருந்து நிறுத்தம், தெரு பலகைகள் துருப்பிடித்து காணப்படுகின்றன.
அதேபோல், அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் போஸ்டர் ஒட்டி, சென்னை மாநகரை அலங்கோலப்படுத்தி உள்ளனர்.
இவற்றின் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை, அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தி.மு.க.,வினர் ஒட்டிய போஸ்டர்களை அகற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து விடுவேன் என, அரசியல் கட்சி பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், ஆளுங்கட்சியினரை காரணம் காட்டி அவர்களும் மிரட்டுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் போஸ்டர், அனுமதியின்றி பேனர்கள் அமைப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு, 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமீப காலமாக, அரசியல் கட்சியினர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுகின்றனர். பலர் கவுன்சிலராகவும் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதேநேரம், துாய்மை பணியாளர்கள் வாயிலாக தான், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தெரு பெயர் பலகை அகற்றப்பட்டு, புதிய பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையை அழகாக்க 'சிங்கார சென்னை' திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அவை சீர்குலைந்து, தற்போது அலங்கோலமாக காட்சியளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டால் மட்டுமே, சிங்கார சென்னையை அழகாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அபராதம்!சென்னையில் கடந்தாண்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போஸ்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அவற்றை ஒட்டிய, 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 16.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -