சென்னை,
சென்னை விமான நிலையத்தில் ஒருவர் படுத்து உறங்கும் அறைகளுடன் கூடிய 'பாட் ஹோட்டல்' வசதி, பல மாதங்களாக செயல்படவில்லை என, பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர்.
முக்கியமான விமான நிலையங்கள், மும்பை போன்ற ரயில் நிலையங்களில், ஒருவர் படுத்து உறங்கும் அறைகளுடன் கூடிய 'பாட் ஹோட்டல்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் பாட் ஹோட்டல் வசதி, 2022 ஆக., 17ல் துவக்கி வைக்கப்பட்டது.முதல் கட்டமாக நான்கு படுக்கை வசதிகளுடன், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் துவக்கி வைத்தார்.
விமான நிலையம் வரும் பயணியர், துாங்கி ஓய்வு எடுக்க வசதியாக இவை அமைக்கப்பட்டன. பெண்கள், ஆண்களுக்கு என, தனி கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இதில் உள்ளன. உடைமைகளைப் பாதுகாப்பாக வைக்க இடவசதி, சார்ஜிங் வசதி, பாதுகாப்பு பெட்டக வசதிகளும் உள்ளன.
இந்த ஓய்வறையை, பயணியர் மணி கணக்கில் பயன்படுத்த முடியும். ஒரு பெட்டில் ஒருவர் படுத்து ஓய்வு எடுக்கலாம். ஆனால், இந்த படுக்கை வசதி துவங்கி ஐந்து மாதங்கள் கடந்தும், முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
இது குறித்து விமானப் பயணியர் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில், படுத்து ஓய்வெடுக்கும் வசதியுள்ள பாட் ஹோட்டலை பயன்படுத்த முயற்சித்தோம். ஆனால், அவை செயல்பாட்டில் இல்லை. இது குறித்து கேட்ட போது அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது, 'அதை செயல்படுத்துவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் கிடைத்துவிடும். அதன்பின் அவை செயல்பாட்டுக்கு வரும்' என்றனர்.