கொத்தவால்சாவடி, கொத்தவால்சாவடியில், முதியோர் மீது 'பூட்ஸ்' காலால் எட்டி உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட கொத்தால்சாவடி எஸ்.ஐ., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் அ.தி.மு.க.,வினரால் கொண்டாடப்பட்டது. துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொத்தவால்சாவடி, ஆதியப்பன் தெருவில், அ.தி.மு.க., மேற்கு பகுதி செயலர் வெற்றிலை மாரிமுத்து சார்பில், 1,000 பெண்களுக்கு சேலைகளும், 5,000 பேருக்கு மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து சேலையும், மதிய உணவையும் வாங்க, ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த குறைந்த அளவே போலீசார் பணியில் இருந்தனர்.
உணவை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில், முதியோர் என்று கூட பார்க்காமல் உணவு வாங்க வந்த வயதானோர்களை பிடித்து தர தரவென இழுத்து தள்ளினார்.
ஒரு முதியவரை கீழே தள்ளி பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனின் செயலுக்கு பலரும் கண்டணம் தெரிவித்தனர்.
இந்நிலையில், எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வடசென்னை காவல் இணை ஆணையர் ரம்யாபாரதி இதற்கான நடவடிக்கையை நேற்று மேற்கொண்டார்.