திருத்தணி:திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே, வாடகை வீட்டில் வசிப்பவர் தங்கராஜ், 40. எலக்ட்ரிஷியன்.
நேற்று காலை, இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு, மனைவியுடன் திருத்தணியில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தார்.
மாலை 3:30 மணியளவில் தங்கராஜ் வீட்டில் இருந்து புகை வெளியேறுவதை கண்டதும் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது வீட்டில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.
அதை தொடர்ந்து பொதுமக்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின.
மேலும் வீட்டில் இருந்த வாஷிங் மிஷினில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் திருத்தணி வருவாய்த் துறையினர் பாதிக்கப்பட்ட தங்கராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதற்கட்ட நிவாரணம் வழங்கினர்.