அரும்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் குடியிருப்புகளில் சுற்றித்திரியும் மாடுகளால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் செல்ல பீதியடைகின்றனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களிடம் மாநகராட்சியினர் அபராதம் வசூலிக்கின்றனர்.
அதன்படி, மாடுகளை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்களை மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.
இருப்பினும், சாலையில் மாடுகள் சுற்றித்திரியும் பிரச்னைக்கு விடிவு கிடைப்பதில்லை. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 107வது வார்டில் சூளைமேடு, பாரதியார் தெரு உள்ளது.
இந்த தெருவைச் சுற்றியுள்ள கண்ணகி தெரு, பாரி தெருக்களில் மாடுகள் வளர்ப்போர், மாடுகளை இப்பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்ற விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, அந்தந்த தெருக்களில் மாடுகளை கட்டி வைத்து, அவற்றுக்கு தீவனம் வைப்பது, பால் கறப்பது என அனைத்து வேலைகளையும் சாலையிலேயே செய்கின்றனர்.
அதேபோல, வீட்டின் வாசல்களில் மாடுகள் சாணம், சிறுநீர் கழித்து செல்வதால், அப்பகுதியில் வசிப்போருக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது.
அதுமட்டுமின்றி, காலையும் மாலையும், குடியிருப்புகளில் மாடுகள் வலம் வருவதால், அங்கு வசிக்கும் சிறுவர் உட்பட பொதுமக்கள், சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.