சென்னை, இந்திய தர நிர்ணய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தர நிர்ணய சட்டம் 2016ன் விதிகள் மற்றும் பொம்மைகள் ஆணை, 2020ஐ மீறி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஹாம்லேஸ் பொம்மை கடையில் பொம்மைகள் விற்பதாக, பி.ஐ.எஸ்., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள ஹாம்லேஸ் பொம்மை கடையில், சென்னை கிளையைச் சேர்ந்த பி.ஐ.எஸ்., அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, 496 மின்னணு மற்றும் 198 மின்னணு அல்லாத பொம்மைகள் என, மொத்தம் 1,466 பொம்மைகள் பி.ஐ.எஸ்., தரக் குறியீடு இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்த குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பொம்மைகள் ஆணைய விதிகளை மீறுவது தெரிய வந்தால், இந்திய தர நிர்ணய தென் மண்டல அலுவலகத்திற்கு பொது மக்கள் தெரியப்படுத்தலாம். மேலும், cnbo1@bis.gov.in என்ற இ- -மெயில் முகவரி மற்றும் 'பி.ஐ.எஸ்., கேர் ஆப்' வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.