வில்லிவாக்கம், பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலுள்ள வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலையில், தினமும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழையின் போது, சென்னையில் பல்வேறு சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக மாறுகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் விபத்திலும் சிக்கித் தவித்தனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சென்னை மாநகராட்சியின் பாராமரிப்பில் உள்ள, 15 மண்டலங்களிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டன.
ஆனால், இன்னும் சில இடங்களில், சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம் வில்லிவாக்கம், 95வது வார்டில், எம்.டி.எச்., சாலைஉள்ளது.
இந்த சாலை, பாடி மேம்பாலத்தில் துவங்கி, ஐ.சி.எப்., அருகில் கொன்னுார் நெடுஞ்சாலையில் இணைகிறது. மூன்று கி.மீ., துாரம் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலேயே உள்ளது.
சாலை முழுதும் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, முறையாக சீரமைக்கப்படாமல், ஆங்காங்கே 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இந்த சாலையின் நடுவே, குடிநீர் வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட துாரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.தவிர, கல்பனா பேருந்து நிறுத்தம் அருகில், சாலை படுமோசமாக பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முதுகு, கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, தினமும் ஏராளமானோர் விபத்திலும் சிக்கி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் இதை கவனித்து, புதிய சாலை அமைத்து, பல ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.