இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை தேவை
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரம் நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், ரயில்வே மேம்பாலம் முடியும் இடத்தில், சாலை நடுவே மீடியன் உள்ளது.
இந்த மீடியன் முகப்பில், ஒளிரும் 'ரிப்லெக்டர் ஸ்டிக்கர்' அமைக்காததால், இரவு நேரங்களில், இந்த மீடியன் மீது நிறைய வாகனங்கள் மோதி, விபத்துகள் ஏற்படுகின்றன.
இது வரையில், யாருக்கும் காயம், உயிர் சேதமோ ஏற்பட்டதில்லை. இரவு நேரங்களில், இவ்விடத்தில் மீடியன் இருப்பது தெரியாமல், நிறைய வாகனங்கள் மோதுவதால், இந்த மீடியனே உடைந்து சேதமாகியுள்ளது.
பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர், இந்த மீடியன் முகப்பில், ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைத்தால், இரவில் ஏற்படும் விபத்துகளை தடுக்கலாம்.
-கார்த்திக் பாண்டியன், திம்மாவரம்.
மின் விளக்கு 'சுவிட்ச்' பெட்டிகளை சீரமைக்க வேண்டுகோள்
மறைமலை நகர் நகராட்சி சார்பில், மறைமலை நகர் சிப்காட் அரசானிக்குளம் பகுதியில் உள்ள சாலை ஓரம், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மின் விளக்குகளை இயக்கவும், அணைக்கவும் குறிப்பிட்ட மின் கம்பங்களில், 'சுவிட்ச்' அமைக்கப்பட்டு, மழைக்காலங்களில் நனையாதவாறு, இரும்பு தகரத்தால் ஆன பெட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த பெட்டிகள் துருப்பிடித்து மூடி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, புதிய 'சுவிட்ச்' பெட்டிகள் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இ.அனிதா, மறைமலை நகர்.
சாலையோரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகள்
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சி பகுதியில், திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது.
அப்பகுதியில் வரும் புகையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஊராட்சி சார்பாக, குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு சேகரமாகும் குப்பையை, சிலர் தீயிட்டு எரித்து விடுகின்றனர்.
எனவே, குப்பையை முறையாக அகற்றி, அப்பகுதியில் கூடுதல் குப்பை தொட்டி அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ச.திலகராஜ், அச்சிறுபாக்கம்.
சோலார் மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
செய்யூர் அருகே போந்துார் செல்லும் சாலையில், 2021ம் ஆண்டு, 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சோலார் மின் விளக்கு பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில், சாலை இருளில் மூழ்கி காணப்படுகிறது,
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சோலார் மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
--ந.தினகரன், தண்ணீர்பந்தல் கிராமம்.