மாமல்லபுரம், கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், மஞ்சனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர், முனி கிருஷ்ணப்பா; கர்நாடக, அரசுப் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம், தமிழகத்திற்கு குடும்பத்துடன் வந்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் வழிபட்டு, நேற்று மாமல்லபுரம் வந்தார்.
சிற்பங்களை கண்டு ரசித்து, 10:45 மணிக்கு கடற்கரை கோவில் அருகில், குடும்பத்தினர் கடலில் குளித்தனர். அப்போது, முனி கிருஷ்ணப்பாவின் மகள் சுனிதா, 15, மற்றும் மகன் இருவரும், ராட்சத அலையில் சிக்கினர். மகன் உயிர் தப்ப, மகளை அலை இழுத்துச் சென்றது. மாமல்லபுரம் தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில், 11:30 மணிக்கு உடல் மிதந்து ஒதுங்கியது.
அவசர ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதித்த போது, சிறுமி இறந்துவிட்டது தெரிந்தது. மாமல்லபுரம் போலீசார், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சிறுமியின் உடலை அனுப்பி, விசாரிக்கின்றனர்.