காசிமேடு, காசிமேடில், அபாயகரமான நிலையிலுள்ள நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகர், ஜி.எம்.பேட்டை பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 498 நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இவற்றில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடுகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால், சேதமான வீடுகளை மறுசீரமைக்க வேண்டுமென, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், மறுசீரமைப்பு பணிக்காக, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்த நிலையிலுள்ள வீடுகளை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜி.எம்.பேட்டை, சிங்காரவேலன் நகர் மக்களின் முக்கிய பிரச்னைகளான கட்டடத்தின் கீழே உள்ள மின்பெட்டிகளை சீரமைக்கும் பணியும், 'ஏ, பி, சி, இ' உள்ளிட்ட நான்கு 'பிளாக்'குகளில் குடிநீர் வழங்குதல், கூரை சீரமைப்பு, கழிவு நீர் பிரச்னைகள் தீர்வு மற்றும் வெளிப்புற சுவர்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன.
மேலும், வீடுகளில் பழுது ஏற்பட்டுள்ள பால்கனி சேதம், கைப்பிடி சேதம், படிக்கட்டுகள் சேதம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.