அம்பத்துார், சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை, மாநகர பேருந்து நிலையம் அருகே, தனியார் வளாகத்தில், எம்.ஜே.வி. இண்டேன் காஸ் ஏஜன்சி குடோன், கட்டுமான நிறுவனம் மற்றும் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன கலவை தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவை உள்ளன.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, 1:45 மணியளவில், காஸ் ஏஜன்சியின் அலுவலக அறையில், திடீரென தீ பிடித்தது.
அங்கிருந்த காவலர் செல்வராஜ், 50, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
அதற்குள் தீ மளமளவென, அந்த வளாகம் முழுக்க பரவி எரிந்தது.
சம்பவ இடத்திற்கு, அம்பத்துார் தொழிற்பேட்டை, ஜெ.ஜெ., நகர், வில்லிவாக்கம், மதுரவாயல், தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, நுாற்றுக்கும் அதிகமான சமையல் காஸ் சிலிண்டர்களை அங்கிருந்து அகற்றினர்.
அதை தொடர்ந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்த மற்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.