செங்கல்பட்டு:வேளாண்மை இணை இயக்குனர் அசோக் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 2021- - 22ம் ஆண்டு துவங்கி, 89 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
நடப்பு 2022- - 23ம் ஆண்டில், 89 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இங்கு, உழவர்களுக்கான முகாம், இன்று மற்றும் பிப். 9ம் தேதிகளில் நடக்கிறது.
இந்த முகாமில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத் துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பூச்சி நிர்வாகம், திட்டங்கள் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.
பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள், பி.எம்., கிசான் திட்டத்தில் புதிய நபர்கள் சேர்த்தல், உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பான கூடுதல் விபரம் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண்மை - உழவர் நலத்துறையின் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.