சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார், கண்ணகிநகர், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு டாக்டர், இரண்டு, மூன்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி, தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில், டாக்டர்கள் செல்ல முடியாததால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கண்ணகிநகரில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு, அதிக வசதிகள் இருந்தும், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
விரிவாக்க பகுதியாகவும், ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.