சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அனல் மின் நிலையத்தில், இந்த ஆண்டில் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பல மாதங்களாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதால், மக்கள் பணம் வீணாகி வருகிறது.
தமிழக மின் வாரியம், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகா வாட் திறனில், இரு அலகு கள் உடைய அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2016ல் துவக்கியது. திட்ட செலவு 12 ஆயிரத்து 778 கோடி ரூபாய்.
இத்திட்டத்தை 2016 பிப்., 29ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். உப்பூர் பகுதியில் வசிக்கும் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த தீர்ப்பாயம், கட்டுமான பணிகளை தொடர, 2021 மார்ச்சில் தடை விதித்தது; அன்று முதல் பணிகள் முடங்கின.
பூர்வாங்க அனுமதி
இதையடுத்து, மின் நிலைய பணிகளை உப்பூரிலேயே தொடரலாமா அல்லது துாத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு மாற்றலாமா என்பது குறித்து, தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவின் ஆலோசனையை கேட்டது மின் வாரியம்.
அக்குழு அளிக்கும் முடிவுக்கு ஏற்ப திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் காத்திருக்கிறது.
இதுகுறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உப்பூர் மின் நிலையத்தில், 'பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர்' ஆகிய சாதனங்களை நிறுவுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை, மத்திய அரசின், பி.எச்.இ.எல்., நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக 5,852 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது.
இதற்காக, 227.36 ஏக்கர் புறம்போக்கு நிலம், 762.46 ஏக்கர் பட்டா நிலம், 5.34 ஏக்கர் கோவில் நிலம் கையகப்படுத்தப்பட்டன; அவர்களுக்கான பணம் பட்டுவாடாவும் துவங்கியது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஒப்புதல்களும் பெறப்பட்டன.
ஒடிசா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி, உப்பூரில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
எனவே, துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, ரயில் வழியாக நிலக்கரி எடுத்து வரப்பட உள்ளது.
இதற்காக, ராமநாதபுரத்தில் இருந்து திருப்பாலைக்குடி வரை, 25.8 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான மொத்த செலவையும் மின் வாரியமே ஏற்க ஒப்புக் கொண்டது.
ரயில் பாதை அமைக்கும்போது, தேசிய நெடுஞ்சாலைகளை கடக்க வேண்டும் என்பதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. திட்டத்திற்கான பூர்வாங்க அனுமதி அனைத்தும் பெறப்பட்ட நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், 2021 மார்ச் 17ல் தடை விதித்தது.
உடன்குடியில் மின் வாரியம் தலா 600 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைத்து வருகிறது. அதற்கு நிலக்கரி எடுத்து வர, உடன்குடி கடற்கரையில் இருந்து 8 கி.மீ., துாரம் உள்ள கடலில், நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆட்சி மாற்றம்@
@
அங்கிருந்து, 'கன்வேயர் பெல்டில்' உடன்குடி மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வரப்படும். அதேசமயம், உப்பூர் மின் நிலையத்திற்கு துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, தினமும் ரயிலில் நிலக்கரி எடுத்து செல்லப்பட வேண்டும்.
இதனால் செலவு அதிகரிக்கும் என்பதால், உப்பூர் திட்டத்தை கைவிட, அரசு விரும்புகிறது.
இதற்கிடையில், உப்பூர் திட்டத்தை அப்படியே உடன்குடிக்கு மாற்றி விடலாம் என்று பரிந்துரைத்த அதிகாரிகள், 'உப்பூருக்கு ஒதுக்கிய நிதியை வைத்தே, உடன்குடி மின் நிலையத்திற்கு அருகில், உடன்குடி விரிவாக்கம் என்ற பெயரில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கலாம்' என யோசனை கூறினர்.
அதன்படியே முடிவும் எடுக்கப்பட்டது. இதற்கு மின் வாரிய இயக்குனர்கள் குழு, 2021 ஏப்., 29ல் ஒப்புதலும் அளித்து விட்டது. இது நடந்தது, பழனிசாமி ஆட்சியில். பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, உப்பூர் மின் நிலையத்தை அதே இடத்தில் தொடரலாமா அல்லது இடையில் திட்டமிட்டதுபோல, உடன்குடிக்கு மாற்றலாமா என, மின் வாரியம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டது.
நல்ல முடிவு
எதில் செலவு குறைவு என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசு அறிவுறுத்தியது. அதன்படி, தனியார் ஆய்வு நிறுவனம் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது.
அதில், உப்பூர் திட்டத்தை அங்கேயே தொடர ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும், இதுவரை உப்பூர் திட்டம் தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால், உப்பூரில் கட்டு மான பணிகள் 22 மாதங்களாக முடங்கிஉள்ளன.
ஏற்கனவே கட்டுமானப் பணிகளுக்கு 2,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்து உள்ள தமிழக அரசும், மின் வாரியமும், மக்கள் வரிப் பணம் தொடர்ந்து வீணாகாமல், நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க, 2021ல் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட ஐந்து பேர் உள்ளனர்.மின் துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை வழங்க, அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில், அதே ஆண்டு நவம்பரில் துணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மின் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, டிச., 12 முதல் ஐந்து நாட்களுக்கு ஆலோசனை நடத்தினர்.அப்போது, உப்பூர் திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஆளுங்கட்சியின் அதிகார மைய புள்ளி ஒருவர், திட்டப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம், 15 சதவீதம் 'கமிஷன்' எதிர்பார்க்கிறாராம். அதனாலேயே, எல்லா பிரச்னை களும் முடிந்த பின்னும், திட்டம் மீண்டும் துவக்கப்படாமல் இருப்பதாக, மின் வாரிய வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்படுகிறது.