சென்னை:கோடை தேவையை சமாளிக்க, அடுத்த மாதம் 15 முதல், 28ம் தேதி வரை தினமும் 500 மெகா வாட்; மார்ச் 1ல் இருந்து மே 20 வரை 1,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் போதவில்லை. எனவே, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். பள்ளி, கல்லுாரிகளில் இறுதி தேர்வு, கடும் வெயில் காரணமாக, சில ஆண்டுகளாக பிப்ரவரியில் இருந்தே மின் தேவை அதிகரிக்கிறது.
அதை பூர்த்தி செய்வதற்காக மின் வாரியம், பிப்., 15ல் இருந்து 28 வரை, 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளது.
இது தவிர, மார்ச் 1ல் இருந்து மே 20ம் தேதி வரை 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 1,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளது.