சென்னை:டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், துாக்க மாத்திரைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரித்துள்ளது.
தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனநோய் மருந்துகள் மற்றும் துாக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்கப்படுவதை கண்காணிக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள மருந்து கடையில், வலி நிவாரணி மருந்துகள் அதிகம் வாங்கி, உரிய ரசீதுகள் இல்லாமல் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.
புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் மருந்து கடை மூடி, 'சீல்' வைக்கப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் கீழ், கடை உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மருந்துகள் மற்றும் துாக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே, விற்க வேண்டும்.
பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.