தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன்: சின்ன வயதில் இருந்தே, எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லை; வெறும் படிப்பு தான். பல ஆண்டுகளுக்கு முன், திடீரென சர்க்கரை வியாதி வந்திருப்பதாகக் கூறினர்.
டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்ற போது, 'அதற்கான உடனடி மருத்துவம், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது தான்...' என்றார்.
அந்த நடை தான், பின், ஓட்டமாக மாறியது. அதன்பின் நடந்த ஒரு சாலை விபத்தால், நடக்கவே முடியாத நிலையில் இருந்த நான், மருத்துவருக்கே சவால் விட்டு, வைராக்கியத்துடன் முயற்சி செய்து, இன்று, 'மாரத்தானில்' ஓடிக் கொண்டிருக்கிறேன்.
புதுச்சேரியில், 2014ல் மாரத்தான் போட்டி அறிவித்தனர்; நண்பர்களுடன் சேர்ந்து ஓடினேன். கரடு முரடான பாதை; 21 கி.மீ., துாரம்; 2 மணி நேரம், 34 நிமிடம் ஓட்டம். கூட வந்தவங்க, 3 மணி நேரம் எடுத்துக்கிட்டாங்க. அது தான், என் முதல் மாரத்தான் அனுபவம்.
அதன்பின், எங்கு மாரத்தான் போட்டி நடந்தாலும், முதல் ஆளாக சேர்ந்து கொள்வேன்.
என், 50 வயதில், ஒரு நீரிழிவு நோயாளியாக, இரண்டு ஆண்டுகளில், 25 மாரத்தான் ஓடினேன். 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளேன்.
மூன்றாண்டில், 50; நான்காண்டில், 75; ஐந்தாண்டில், 100 என, இதுவரை, 138 மாரத்தான் ஓடியிருக்கேன்; 139வது மாரத்தான் கடந்த வாரம் நடந்தது.
சர்க்கரை நோய்க்கு பயந்து துவங்கிய பயணம், சாதனையாக மாறி விட்டது. இதுவரை மாரத்தானில் தேசிய சாதனை, ஆசிய சாதனை, உலக சாதனை என, பல சாதனைகள் செய்திருக்கிறேன். தினமும், 10 கி.மீ., ஓடினால் தான், மனதிற்கு நிறைவாக இருக்கும்; ராத்திரி துாக்கமும் வரும்.
ஜனவரி 1ம் தேதி, எல்லாரும் ஒரு தீர்மானம் எடுத்துக் கொள்வர்; அந்த வகையில், இந்தாண்டு நானும் தீர்மானம் எடுத்திருக்கேன்... அது, ஜன., 1 முதல் டிச., 31 வரையிலான, 365 நாட்களில், ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் வீதம் மொத்தம், 8,760 மணி நேரம் உள்ளது.
அதில், 560 மணி நேரம் ஓடவும், நடக்கவும் செய்யணும் என்பது தான் அது!