'பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உரையாடும் 'பரீட்சை வீரர்கள்' நிகழ்வை, மாணவர்கள் அனைவரும் நேரலையில் காண தேவையான ஏற்பாடு களை மாநில அரசுகள் செய்ய வேண்டும்' என மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உரையாடும் 'பரிக்ஷா பே சர்ச்சா' எனப்படும் பரீட்சை வீரர்கள் நிகழ்வு, 2018 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது.
இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
கடிதம்
இந்த ஆண்டுக்கான நிகழ்வு, புதுடில்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் 27ல் நடக்கிறது. இது, துார்தர்ஷன் 'டிவி'யில் நேரலையில் ஒளிபரப்பாகிறது; வானொலியிலும் ஒலிபரப்பாகிறது.
மேலும், பிரதமர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சக இணையதளங்கள், 'ஸ்வயம்பிரபா டிவி' மற்றும் 'பேஸ்புக் லைவ்' ஆகியவற்றிலும் நேரலையில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்வை அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன் விபரம்:
தேர்வு எழுதும் 1,200 மாணவர்களுடன் 27ல் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் நிகழ்வை, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மாணவர்கள் காண ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நிகழ்வை, குக்கிராமங்களில் உள்ள மாணவர்களும் காண தேவையான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
ஏற்பாடு
பள்ளிகளில் 'டிவி' பெட்டி இல்லை எனில், மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தி, இதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது கணினி, 'லேப் டாப்' உள்ளிட்ட கருவிகள் வாயிலாக மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்நிகழ்வை பள்ளி மாணவர்கள் நேரலையில் பார்க்கும் புகைப்படங்களை, www.mygov.in என்ற இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -