சென்னை:சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழா, நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சர்வதேச பதிப்பகங்கள் மற்றும் தமிழ் பதிப்பகங்களுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மருத்துவத்துறை நுால்களை, மருத்துவ மாணவர்களுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பதிப்புத் துறையை வளர்க்க, முதல் முறையாக, சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்தி உள்ளது. உலகின் தலை சிறந்த அறிவு பதிப்புகளை, தமிழுக்கு எடுத்து வர வேண்டும் என்ற அடிப்படையில், இந்த சர்வதேச புத்தக கண்காட்சி, 6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டு உள்ளது.
அரசின் சார்பில், 123 நுால்கள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழில் இருந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும், தமிழின் முக்கிய படைப்புகள், மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
ஜெர்மனி, இத்தாலி, சீன மொழிகளிலும், தரமான தமிழ் நுால்கள் மொழி பெயர்க்கப்படும்.
உலக இலக்கியங்களுக்கு இணையான இலக்கியங்கள், தமிழில் இருந்தும், புகழ் பெறதாதற்கு காரணம், மொழி பெயர்க்கப்படாததே, என, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை படித்தேன்.
அதை தகர்க்கும் வகையில், இதில், தமிழ் இலக்கியத்திற்கான, மொழி பெயர்ப்பு காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பதிப்பாளர்கள், இதில் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில், 3 கோடி ரூபாய், மொழி பெயர்ப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இந்திய மற்றும் உலக மொழிகளில், தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களுடன், 365 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தாண்டு, மூன்று நாட்களில் நடத்தப்பட்ட கண்காட்சி, அடுத்தாண்டுகளில், இன்னும் விரிவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.