புதுடில்லி காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்துள்ள பஞ்சாபின் முன்னாள் அமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல், ''காங்.,கில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது,'' என குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் நிதி அமைச்சரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்ப்ரீத் சிங் பாதல் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
புதுடில்லியில் பா.ஜ., தலைமையகத்தில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்த போது அவர் கூறியதாவது:
காங்., கட்சியில், அனைத்து மாநிலங்களிலும் கோஷ்டி பூசல்களும், மோதல்களும் நடந்து வரும் நிலையில், அங்கு என்னால் எப்படி தொடர முடியும். அதே நேரத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா ராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார நிலையிலும் வலுவாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மன்ப்ரீத் சிங், காங்., - எம்.பி., ராகுலுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், 'கட்சியில் எனக்கு கிடைத்த கடும் ஏமாற்றம் காரணமாக விலகுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.