சென்னை:மலேஷியாவில் நடந்த படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் ஆண்டனி, 48, நேற்று சென்னை திரும்பினார்.
சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய் ஆன்டனி. இவர் பிச்சைக்காரன் - 2 படத்தை தயாரித்து, நடித்து, இயக்கியும் வருகிறார்.
கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு, மலேஷியாவில் லங்காவி தீவில் நடந்தது. படகில் நடந்த சண்டைக் காட்சியில், திடீரென ஏற்பட்ட விபத்தில், காயங்களுடன் விஜய் ஆன்டனி தப்பினார். கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், நேற்று அவர் சென்னை திரும்பினார்.
இதுகுறித்து, விஜய் ஆன்டனி தரப்பினர் கூறியதாவது:
விபத்தில் விஜய் ஆன்டனி உதட்டில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்த அவர், மறுநாளே படத்தின் 'எடிட்டிங்' வேலையில் ஈடுபட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.