வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, 'நம் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதுடன், நம் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்க முயற்சிப்பதால் தான், 'சிமி' அமைப்பு மீதான தடை தொடர்கிறது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, ௨௦௦௧ல் தடை செய்யப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடை செய்து, மத்திய உள்துறை அமைச்சகம், ௨௦௧௯ல் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
![]()
|
சிமி அமைப்பு மாணவர்களை திரட்டி, 'ஜிகாத்' எனப்படும் மதப் போர் வாயிலாக, நம் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்களை மத ரீதியில் துாண்டிவிட்டு, மன மாற்றம் செய்து, நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் பயிற்சி அளித்து வருகிறது.
இந்த அமைப்பு, நம் நாட்டின் கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசனத்தை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது. அதுபோல, சிலை வழிபாடு பாவம் என்றும், இதை அழிப்பது தங்களுடைய கடமை என்றும் மாணவர்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்தே இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்பின், இந்த அமைப்பின் நிர்வாகிகள் பல்வேறு பெயர்களில், தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கு, பல முஸ்லிம் மதவாத அமைப்புகளுடனும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு உள்ளது.
சிமி அமைப்பு, நம் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும், நம் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கும் இவர்களுடைய நோக்கத்தை ஏற்க முடியாது. அதனால், இந்த அமைப்பின் மீதான தடை தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.