சென்னை:'ஏழு ஆண்டுகள் தலைமை காவலராக பணிபுரிந்தவருக்கு, பதவி உயர்வு வழங்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராமசாமி. காவல் துறையில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த தனக்கு, சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து, அரசு மற்றும் காவல் துறை தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வுக்கு, 10 ஆண்டுகள் தலைமை காவலராக பணிபுரிந்து இருக்க வேண்டும் என, 2022ல் முழு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமை காவலராக பணிபுரிந்த ராமசாமிக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை. பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.