அய்ஸால், மிசோரமில், நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், அசாம் ரைபிள்ஸ் படையினர், மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அய்ஸால் நகரின் அருகே உள்ள பவன்குவான் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக, அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்டதில், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.