தஞ்சாவூர்:கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்படுவதால், கல்லணை அணைக்கு ஆபத்து ஏற்படும் என, விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். அதனால், நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, கிளிக்கூடு ஆகிய இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை, கொள்ளிடம் ஆற்றில், தஞ்சாவூர் மாவட்டத்தின் சாத்தனுார், மருவூர், வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில், கிளிக்கூடு என்ற இடத்திலும் மணல் குவாரி அமைத்தது.
ஆனால், சாத்தனுாரில் மணல் அள்ளாமல், கல்லணையில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலடி கிராமத்தில் மணல் அள்ளப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஒவ்வொரு மணல் குவாரியிலும், நாளொன்றுக்கு 100 லாரிகளில் மணல் அள்ள மட்டுமே அனுமதி. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மணல் அள்ள அனுமதி இல்லை.
அரசு மணல் குவாரி என்றாலும், மணல் அள்ளித்தரும் பணி தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், கோவிலடி, கிளிக்கூடு மணல் குவாரிகளில் நாளொன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டது.
மணல் லாரிகள் குவாரிக்கு வந்து செல்ல வசதியாக, சிலருக்கு பணத்தை வாரி இறைத்து, விளை நிலங்களிலும், ஆற்றிலும் தனியாக சாலை அமைத்தனர். ஆற்றில் சாலை அமைக்கப்பட்டதால், ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் 2 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறி, 10 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளப்படுவதால், ஆற்றில் மணல் வளம் குறைந்து கல்லணை அணைக்கு பேராபத்து ஏற்படும் என, விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தமிழர்களின் கட்டுமானத்துக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கல்லணையை, சர்வதேச சின்னமாக அறிவிக்க வேண்டும் என, தி.மு.க., -- எம்.பி., சிவா, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை தி.மு.க.,வினர் நடத்தினர். தற்போது அக்கட்சியினர் ஆட்சியில் இருப்பதால், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சியில், லால்குடி அருகே கூகூர், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சென்னம்பூண்டியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது.
இதனால், விவசாயம் மட்டுமன்றி, வீராணம் குடிநீர் ஆதாரத்திற்கும், கல்லணைக்கும் பாதிப்பு ஏற்படும் என, திருச்சி மங்கம்மாள்புரம் கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதே போல, தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லணை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜீவக்குமாரும் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதனால், தற்போது திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் தற்காலிகமாக செயல்படாமல் உள்ளது.
அதே சமயம், திருச்சியில், மாதவபெருமாள் கோவில், தாளக்குடி ஆகிய இடங்களில் மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஜீவக்குமார் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதை விட, அரசு அக்கறையாக செயல்பட வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில், தனியார் ஒப்பந்த நிறுவனம் அனைத்து அரசியல் கட்சியினர் துணையோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணலை அள்ளி வருகின்றனர். மணல் அள்ளும் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழர்களின் கட்டுமானத்துக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கல்லணையின் அருகிலேயே மணல் கொள்ளை நடைபெறுவதால், எதிர்காலத்தில் கல்லணை அணைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே போல், கொள்ளிடம் ஆற்றில் மணல் தொடர்ந்து அள்ளுவதால், அங்கு நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் கல்லணையில் இருந்து விளாங்குடி வரை கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன.
கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்று பகுதியை பாதுகாக்கப்பட்ட நீர்மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.