புதுடில்லி :'தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடக்கும்' என, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக
அறிவித்தது. அதேபோல, வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபைகளுக்கு பிப்., 27ம் தேதியும், திரிபுரா சட்டசபைக்கு பிப்., 16ம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுகள் மார்ச் 2ல் எண்ணப்பட்டு, முடிவுகள்
அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு, சமீபத்தில் காலமானார். இதையடுத்து, 'இந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உட்பட ஒன்பது மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்த தேர்தல்களுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், புதுடில்லியில் நேற்று வெளியிட்டார்.
இதன் விபரம்:லட்சத்தீவு லோக்சபா தொகுதி மற்றும் அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், தமிழகம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அருணாச்சல பிரதேசத்தின் லும்லா, ஜார்க்கண்டின் ராம்கர், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு, மேற்கு வங்கத்தின் சகர்திகி, மஹாராஷ்டிராவின் கஸ்பாபெத் மற்றும் சிஞ்ச்வத் ஆகிய ஆறு தொகுதிகளில், பிப்., 27ல் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஜனவரி 31ல் வேட்பு மனு தாக்கல் துவங்கப்படும். பிப்., 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பிப்., 10ல் வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு பிப்., 16ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தொகுதிகளுக்கு பிப்., 27ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், மார்ச் 2ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மூன்று மாநிலங்களிலும் தலா, 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது. இங்கு 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், 59 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தம், 51 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 36 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. எனவே, தற்போது நடக்கவுள்ள தேர்தலில், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.

நாகாலாந்தில், முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி மார்ச் 12ல் முடிவுக்கு வருகிறது. கடந்த 2018ல் நடந்த தேர்தலில், என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணி 29 இடங்களில் வென்றது. நாகா மக்கள் முன்னணிக்கு 26 இடங்கள் கிடைத்தன. முதல்வர் ரியோ போட்டியின்றி தேர்வானார். இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது.

மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சி, மார்ச் 15ல் முடிவுக்கு வருகிறது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 இடங்களை பிடித்தாலும், தேசிய மக்கள் கட்சி, பா.ஜ., உட்பட ஆறு கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைந்தது. இங்கும் அதிக இடங்களை இம்முறை கைப்பற்ற, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
இந்த மூன்று வடகிழக்கு மாநிலங் களும் அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வசமிருந்த வடகிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மெல்ல வேரூன்றி வருகிறது. திரிபுராவில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டணி அமைத்து, இந்த தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்து உள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. கொரோனா பரவல் இருக்கும் சூழ்நிலையை வைத்து, அந்தந்த தொகுதிகளில் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்வர் என கூறப்படுகிறது.
பணிகள் துவங்கின!
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 238 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலுக்கு 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ''பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
5 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா!
மேகாலயா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, ஆளும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரெனிக்டன் டோங்கார், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஷிட்லங் பேல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மைரால்பார்ன் சயம், சாக்மி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ., லம்போர் மல்கியாங் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனநாயக கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.