பழநி:பழநி மலை முருகன் கோவிலில் ஜன., 27ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சன்னிதி விமானம், ராஜ கோபுரத்தில் தங்க கலசங்கள் பொருத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம், இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, ராஜகோபுரத்தின் ஐந்து கலசங்கள் உட்பட, கோவிலின் மொத்தமாக உள்ள, 50 கலசங்களுக்கு தங்கத்தகடு பொருத்தவும், வெள்ளி வேலைகளுக்கும், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், ராஜகோபுரத்திற்கான ஐந்து கலசங்கள் உட்பட, 14 கலசங்களின் பணி முடிந்த நிலையில், நேற்று காலை 9:00 மணி முதல் பாரவேல் மண்டபத்தில் தங்க கலசங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
கோபுர தங்க கலசங்களில் பாத யாத்திரை பக்தர்கள், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள், இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி, பணியாளர்கள் நவதானியங்களை நிரப்பினர்.
பின் மேளதாளங்கள் முழங்க, தங்க கலசங்களை கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் வழியே எடுத்து வரப்பட்டு ராஜ கோபுரம், கோவில் சன்னிதி விமானங்களில் பொருத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
அப்போது கருடன் கோபுரத்தின் மேல் வலம் வந்தது. பக்தர்கள், 'ஓம் முருகா...' என்ற கோஷத்துடன் தரிசித்தனர்.