நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த, 35 வயது வாலிபர், ஆப்ரிக்காவின் கென்யா நாட்டில் பணியாற்றுகிறார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர், கென்யாவில் இருந்து நாமக்கல் வந்தார். கென்யாவில் இருந்து ஷார்ஜா வழியாக விமானம் மூலம், கோவை விமான நிலையம் வந்தார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை கொரோனா ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், வீட்டில் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காளப்பநாயக்கன்பட்டி பகுதியில், தீவிர கெரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் கூறியதாவது:
காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அவரது குடும்பத்தில் உள்ள ஆறு பேரின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன; அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.