செம்மஞ்சேரி, செம்மஞ்சேரியில், தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முக நகரில் உள்ள, 11 தெருக்களில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, வீட்டு குடிநீர் இணைப்பு வசதி வழங்கவில்லை. இதனால், ஒவ்வொரு தெருவிலும் பொதுக்குழாய் மற்றும் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக, முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், பகுதி மக்கள் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், இங்கு குடிநீர் வினியோகம் செய்ய, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதை, சுத்தம் செய்யாமல் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டது.
இதனால், பகுதி மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.இந்நிலையில், தெருக்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஒவ்வொரு தெருவில் உள்ள தொட்டிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
இதேபோல், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் உள்ள தொட்டிகளையும் ஆய்வு செய்து சுத்தம் செய்ய, குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளையில், தினமும் குடிநீர் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.